1 லட்சம் பணம் இருந்த பையுடன் பேருந்தில் சீட் போட்ட மூதாட்டி; டீ குடிக்க சென்றபோது புறப்பட்ட பேருந்து
சத்தியமங்கலம் அடுத்த கேர்மாளத்தைச் சேர்ந்தவர் மங்கலம்மா(65). கேர்மாளத்தில் இருந்து சத்தியமங்கலம் வந்த மங்கலம்மா, திருப்பூர் செல்வதற்கு திருப்பூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்தில் இடம்பிடிப்பதற்காக, தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையை வைத்துவிட்டு, தேநீர் அருந்த சென்றுள்ளார். மீண்டும் வந்த பார்த்த போது, பேருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விஷயம் என்னவென்றால், அந்த மஞ்சள் பையில் மூதாட்டி மங்கலம்மா ஒரு லட்சம் ரூபாயை வைத்திருந்தார். உடனடியாக காவல் துறையினரை அணுகியுள்ளார். அவர்கள் புன்செய் புளியம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்து, பேருந்து நிலையத்தில் எதிர்நோக்கி காத்திருந்து, பாட்டியின் மஞ்சள் பையை மீட்டுள்ளனர்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மூதாட்டி தவறவிட்ட பையில் ஒரு லட்சம் ரூபாயும், வெள்ளிப் பொருட்களும் அப்படியே இருந்தன. பணம் கிடைத்த மகிழ்ச்சியில், தனக்கு உதவிய காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார் மூதாட்டி மங்கலம்மா.