வீடில்லாமல் தவித்த பாட்டிக்கு வீடு கட்டிக் கொடுத்த இளைஞர்கள் - ஊரடங்கில் ஒரு உன்னத சேவை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஃபேஸ்புக் மூலம் இணைந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பசியில்லா நத்தம் என்ற அறக்கட்டளை மூலம் நத்தம் பகுதியில் பசியால் வாடும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் முதியோர்களுக்குக் கடந்த ஒன்றரை வருடங்களாக உணவளித்து வந்தனர்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தபோது, சிறுகுடியைச் சேர்ந்த சின்னம்மாள் என்ற பாட்டிக்கு உணவுப் பொருள் வழங்க அவரது இருப்பிடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது அந்தப் பாட்டி உறவினர்களால் கைவிடப்பட்டு, சிதிலமடைந்த வீட்டில் மழையிலும் வெயிலிலும் கஷ்டப்பட்டு வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து பசியில்லா நத்தம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள், சிறுகுடியைச் சேர்ந்த சிறுகுடி நலம் விரும்பிகள் குழு உறுப்பினர்களுடன் இணைந்து சின்னம்மாள் பாட்டிக்கு வீடு கட்டித் தரும் முயற்சியில் இறங்கினர். இதற்காக நத்தம், சிறுகுடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்களிடம் நிதி உதவியும் பெற்றனர்.
இதன் மூலம் ஒரு மாதத்தில் சின்னம்மாள் பாட்டியின் வீடு கட்டி முடிக்கப்பட்டு, இன்று வீட்டில் புதுமனைப் புகுவிழா நடைபெற்றது. சின்னம்மாளின் வீட்டை நத்தம் காவல் ஆய்வாளர் ராஜ முரளி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்த அனைவருக்கும் பசியில்லா நத்தம் சார்பாக உணவுகள் தயார் செய்து வழங்கப்பட்டது.
உறவினர்களால் கைவிடப்பட்டப் பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த பசியில்லா நத்தம் அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.