ரேஷன் கார்டும் இல்லை.. அரசு உதவியும் கிடைக்க வழியில்லை - தவிக்கும் வயதான தம்பதிகள்
ஓமலூர் அருகே கண்பார்வை குறைவுள்ள வயதான தம்பதிகள் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்டு வருவதாகவும், எனவே அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள உ.மாரமங்கலம் ஊராட்சியில் கருப்பணம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏழ்மையான நிலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் கிடைக்கும் கூலி வேலையை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கால் அனைவரும் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள கரட்டுவளவு பகுதியில் வீரமுத்து, கிருஷ்ணம்மாள் என்ற வயதான மூத்த தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மகனோ, மகளோ இல்லாததால் இருவரும் தனியாக ஒரு சிறிய குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்.
வீரமுத்துவுக்கு கண்பார்வை குறைவு. இவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும், அக்கம்பக்கம் யாரிடமும் உதவிகள் கேட்காமல் அவர்களிடம் இருப்பதை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். முதியவர் வீரமுத்துவுக்கு கண்பார்வை மிகவும் குறைவு என்பதால் அவரை வீட்டிலேயே விட்டுவிட்டு கிருஷ்ணம்மாள் ஆங்காங்கே குப்பையில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கியெடுத்து அதை விற்பனை செய்து உணவுப்பொருட்களை வாங்கி வருகிறார்.
தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் எங்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வருவாய் இல்லாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ஒருநேரம் மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் தெரிகிறது. இவர்கள் ரேஷன் கார்டுக்காக பலமுறை விண்ணப்பித்தும் அவர்களுக்கு இதுவரை ரேஷன்கார்டு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர். அதனால், தற்போது அரசு கொடுக்கும் உதவித்தொகை மற்றும் நிவாரண பொருட்களும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் அடிப்படை வசதி எதுவும் இல்லாமல் தவித்து வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுத்து ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அரசு வழக்கும் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் குடிசை வீட்டிற்கு மின்சார வசதி செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.