முதியோர் ஓய்வூதிய விதிமுறைகளில் தளர்வு..! பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
முதியோர் ஓய்வூதியம் (ஓஏபி) வழங்குவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு சமீபத்தில் தளர்த்தியுள்ளது. இதனால் அதிகமான முதியோர்கள் மாதம் ரூ.1,000 நிதி உதவி பெற வழிகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருவாய் நிர்வாக ஆணையர் ஜே.ராதாகிருஷ்ணன் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு முதியோர் ஓய்வூதிய விதிகளில் திருத்தங்கள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். அதாவது, முன்னதாக 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக சொத்து மதிப்பு கொண்டவர்களே முதியோர் ஓய்வூதியம் வாங்கி வந்தனர். ஆனால் தற்போது ஒரு லட்சத்திற்கும் குறைவாக சொத்து மதிப்பு கொண்ட நபர்கள் முதியோர் ஓய்வூதியம் வாங்குவதற்கு தகுதியுடைவர்கள்.
எந்தவொரு வருமானமும், வருமான ஆதாரமும் இல்லாத நபர், ஆதரவற்றவர், 20 வயதுக்குட்பட்ப உறவினர் இல்லாதவர்கள், ஒரு லட்சத்திற்கும் குறைவான மதிப்புள்ள நிலையான சொத்துகளை வைத்திருப்போர் இந்த வரையறைக்குள் வருவார்கள். அத்துடன் இலவச வீடு ஒதுக்கப்பட்ட நபர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறைகளை மேலும் தளர்த்தவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது சில கடுமையான வழிமுறைகள் பல உண்மையான நபர்கள் மாத ஓய்வூதியம் பெறுவதை தடுத்துள்ளன என்று தெரிவித்தார். “ எங்கள் களப்பணியின்போது பல இடங்களுக்கு பயணித்தோம். அப்போது பல உண்மையான நபர்கள் கடுமையான வழிமுறைகளின் காரணமாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். உதாரணமாக, சில சந்தர்ப்பங்களில், வயதானவர்களுக்கு ஒரு ஏக்கர் தரிசு நிலம் இருந்தது, ஆனால் அதில் இருந்து எந்த வருமானமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
அவர்கள் உண்மையிலேயே ஏழைகளாக இருந்தாலும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். சென்னை போன்ற நகரங்களில் கூட, ஒரு காலத்தில் ஆற்றங்கரைகளில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியிருப்பில் வீடு பெற்றவர்களும் முதியோர் ஓய்வூதியம் பெற முடியவில்லை.” எனத் தெரிவித்தார்.
தற்போது, சுமார் 31 லட்சம் பேர் தமிழக அரசின் மாத ஓய்வூதியம் மூலம் பயனடைகிறார்கள்.