எண்ணூர் கடல் பகுதியில் கலந்த எண்ணெய் படலத்தை நீக்கும் பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனினும் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் அளவு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 28-ஆம் தேதி எண்ணூர் துறைமுகத்திற்கு அருகே இரு கப்பல்கள் மோதிய விபத்தில் 32,813 டன் அளவுக்கு எண்ணெய் எடுத்துச் சென்ற எம்டி டான் காஞ்சிபுரம் கப்பலில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவும், கசிவால் கடலில் கலந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எண்ணெய் கசிவு எற்படுவதை தடுக்க எம்டி டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த POL எண்ணெய் முழுவதுமாக நேற்று வெளியே எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கப்பலில் இருந்து எவ்வளவு டன் எண்ணெய் எடுக்கப்பட்டது என கூறப்படவில்லை. கடலில் கொட்டிய எண்ணெய்யில், இதுவரை 157 டன் அளவுக்கு எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது. கசிந்துள்ள எண்ணெய், குழம்புபோல் இறுகிப் போனதாலும், தண்ணீர் மற்றும் மணலுடன் சேர்ந்து அகற்றும்போது, நுரைத்துக் கொண்டிருப்பதால், உண்மையில் கசிந்துள்ள எண்ணெயின் அளவுக்கும், அகற்றப்பட்டுள்ள கழிவின் அளவுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், எண்ணெய் படலங்களை முழுமையாக அகற்றும் பணி ஓரிரு நாட்களில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.