
சேலம் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்ட பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை கருத்தரங்கில் வேளாண்மை மற்றும் உணவு குறித்து முக்கிய புள்ளி விவரங்களை பேசும்போது, அதிகாரிகள் செல் போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகியவற்றை பார்த்து கொண்டு அலட்சியத்துடன் அமர்ந்திருந்தனர்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தமிழக அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் மண்டல அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் ரோகிணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்த புள்ளியல்துறை, வேளாண்மை துறை, உணவுத்துறை மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் ரோகிணி கலந்துகொண்டு பேசினார். அப்போது பொருளாதார புள்ளியியல் துறையின் மூலமே வளர்ச்சி திட்டங்களை 100 சதவீதம் செயல்படுத்த முடிகிறது. எந்த திட்டத்தை கொண்டுவர வேண்டுமானாலும், அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமானாலும், புள்ளி விபரங்கள் மிக மிக முக்கியமானது என்று பேசினார். மேலும், வேளாண்மை மற்றும் உணவு குறித்த முக்கியமான புள்ளி விவரங்களை மாவட்ட ஆட்சியர் பட்டியலிட்டு பேசும்போது காடையம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் உள்ளிட்ட சில அதிகாரிகள் தனது செல் போனில் வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் ஆகியவைகளை கவனித்து கொண்டும் அதற்கு கமென்ட் அடித்துக்கொண்டும் இருந்தனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து ஒரு சில விவசாயிகள் கூறும்போது விவசாயிகள் பிரச்னையான வேளாண்மை மற்றும் உணவு குறித்து மாவட்ட ஆட்சியர் புள்ளி விவரங்களை தெரிவித்து விவசாயிகளுக்கு பயன்படும்படி செயல்பட வேண்டும், உணவு இன்றி தவிக்கும் பொதுமக்களுக்கு உணவு பொருள் புள்ளி விவரங்களுடன் எப்படி விநியோகிக்க வேண்டும் என முக்கிய தகவல்களை கூறும்போது அதிகாரிகள் அதில் கவனம் செலுத்தாமல், செல்போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றனர். முக்கிய கருத்தரங்கில் கூட கவனம் செலுத்தாத இதுபோன்ற அதிகாரிகள், பொதுமக்களுக்கு எப்படி சேவை செய்ய போகின்றனர் என தெரிவித்தனர். ஆட்சியர் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்திய சம்பவம் விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.