சுடுகாடுக்கு செல்ல மறுப்பு : பாலத்திலிருந்து பிணத்துடன் பாடை இறக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு
சுடுகாடுக்கு செல்ல சிலர் மறுப்பு தெரிவித்ததால் பாலத்திலிருந்து பிணத்துடன் பாடை இறக்கப்பட்ட சம்பவம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நாராயணயுரம் காலனி உள்ளது. பட்டியலினத்தவர் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் இவர்களுக்கான தனி சுடுகாடு உள்ளது. ஆனால், இங்கு போதிய வசதிகள் இல்லாததால், இறந்தவர்களை பாலாற்றங்கரை சுடுகாட்டிற்கு இவர்கள் கொண்டு செல்கின்றனர்.
இந்தச் சூழலில், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டது. இதனால் பாலாற்றின் இருபக்கங்களிலும், ஆற்றிற்கு செல்லும் பாதைகளை வேலி அமைத்து அங்குள்ள விவசாயிகள் வழியை அடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், நாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர்களின் சடலத்தை அப்பகுதி வழியாக எடுத்துச் செல்லவும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவர் விபத்தில் இறந்தார். இவரது உடலை, விவசாய நிலம் வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி, அருகில் உள்ள பாலத்தில் இருந்து கயிற்றால் இறக்கி அதன் பின்னர் அங்கிருந்து இவர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். இறந்த பிறகும் தொடரும் இந்த அவலம் பற்றி, கிராமமக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் தெரிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஆட்சியர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி வட்டாட்சியர், வருவாய் ஆட்சியர், காவல்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.