சேலத்தில் சுகாதாரமற்ற 500 கிலோ ஆட்டு இறைச்சி: பறிமுதல் செய்த அதிகாரிகள்!
சேலத்தில் இறைச்சி விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து 500 கிலோ அளவிலான நோய்வாய்ப்பட்ட ஆடுகள் மற்றும் அதன் இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் சுகாதாரமற்ற முறையிலும் நோய்வாய்ப்பட்ட ஆடுகளின் இறைச்சியும் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை அடுத்து இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கதிரவன் தலைமையில் அதிகாரிகள் குழு பால்பண்ணை, கொல்லப்பட்டி, இரும்பாலை பகுதிகளில் செயல்பட்டு வரும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் நோய்வாய்ப்பட்ட சுகாதாரமற்ற ஆடுகளின் இறைச்சிகளை 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து 500 கிலோ அளவிலான ஆட்டு இறைச்சி மற்றும் 3 நோய்வாய்ப்பட்ட ஆடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென இறைச்சி விற்பனையாளர்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

