சென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை? - விசாரணை தீவிரம்
சென்னை கிண்டியில் வடமாநில இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி பாரதி நகர், பாரதி தெருவில் ஒடிசாவை சேர்ந்த நான்கு பேர் வாடகை வீட்டில் தங்கி செக்யூரிட்டி வேலைக்கு சென்று வந்துள்ளனர். இந்நிலையில் ஜெகாண்டா ரவாத்(30) என்பவர் கடந்த இரண்டு நாட்களாக குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இரவு 9 மணிக்கு உடன் தங்கியிருந்த நண்பர்கள் ரோபி மோஜி(45), சந்தோஷ் மாலிக்(44) வந்து பார்த்த போது ஜெகண்டா ரவாத் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளார். இருவரும் ஜஸ்வந்த் மோஜியை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி செல்போனை துண்டித்து விட்டார்.
பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் கூற அவர் கிண்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் போலீசார் சென்று பார்த்த போது ஜெகண்டா ரவாத் இறந்திருப்பது தெரியவந்தது.
உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், முதுகு தண்டுவடம் உடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடன் தங்கி இருந்த இருவரிடமும் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள ஜஸ்வந்தை போலீசார் தேடி வருகின்றனர்.