ஒகி புயல்: குமரியில் பலியானோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒகி புயலாக மாறி குமரி மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. வாகனங்கள், மக்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
இந்த கோர புயலுக்கு இதுவரை கன்னியாகுமரியில் மட்டும் 10 உயிரிழந்துள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தை சேர்ந்த 18 மீனவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். அத்துடன் கடலில் சிக்கிய கேரளாவை சேர்ந்த 250 மீனவர்களில் 79 பேரை கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இதற்கிடையே தமிழகத்தில் புயலால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.