லட்சத்தீவிற்கு சென்றும் குமரியை வாட்டியெடுத்த ஓகி
ஒகி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்ந்தாலும், அதன் வீரியம் கன்னியாகுமரி மாவட்டத்தை உலுக்கி எடுத்துள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறி கன்னியாகுமரியை புரட்டிப் போட்டது. இந்த புயல் தற்போது லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்திருந்தாலும், கன்னிகுமாரியை விடாமல் உலுக்கியுள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை படகு மூலம் மீட்கும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. அத்துடன் வெள்ளப் பெருக்கினால் நாகர்கோவில், திருநெல்வேலி மார்க்கத்தில் சாலை போக்குவரத்து தடைபட்டுள்ளது.
புத்தேரி பகுதியில் குளம் உடைந்ததால் வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மழை மற்றும் சூறைக்காற்று காரணமாக ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்துள்ளன. இதற்கிடையே சுசீந்திரத்தில் புயல் பாதித்த இடங்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பார்வையிட்டார். மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

