’கோயில் திருவிழாவில் ஆபாச நடனமா? காவல்துறை என்ன செய்தது?’.. மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு

கோயில் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் நடைபெற்றது குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆபாச நடனம், மதுரை உயர்நீதிமன்றம்
ஆபாச நடனம், மதுரை உயர்நீதிமன்றம் file image

விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தைச் சார்ந்த கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எங்கள் கிராமத்தில் கருப்பண்ணசாமி கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கண்காணிப்பில் செயல்பட்டு வருகிறது.

இந்தக் கோயிலில் தனிநபர் யாருக்கும் எந்த முதல் மரியாதையும் கிடையாது. அனைவருக்கும் பொதுவான கோயிலாக இருந்து வருகிறது. ஆனால் இப்போது சிலர் இது தங்களுக்கு சொந்தமான கோயில் என்றும், சிலருக்கு மட்டுமே முதல் மரியாதை என்றும் பிரச்னை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற பங்குனி உற்சவ விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். நீதிமன்றத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன், குறிப்பாக ஆபாச நடனங்கள் இருக்கக்கூடாது என நிபந்தனைகள் விதித்து அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக 1/04/23 அன்று நடைபெற்ற ஆடல் பாடலில் மிகவும் ஆபாசமாகவும், அசிங்கமான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. எனவே இந்த விழா ஏற்பாட்டாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி P.T ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், கோயில் திருவிழா அன்று ஆபாச நடனம் ஆடியதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தாக்கல் செய்யப்பட்டன.

இதனைப் பார்த்த நீதிபதி, "கோயில் திருவிழாவில் இப்படி ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதித்தது எப்படி? கோயில் என்பது இறைவணக்க வழிபாட்டுக்கு பொதுமக்கள் வரக்கூடிய இடம். இங்கு இவ்வளவு ஆபாசமான நடனம் நடைபெற்றபோது காவல் துறை என்ன செய்தது” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, ஆபாச நடனம் குறித்து இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என அரசு தரப்பு, முதல் தகவல் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைப் பார்த்த நீதிபதி, ”பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு இந்த நடனங்கள் உள்ளன. ஆனால் சாதாரண பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. எனவே விழா ஏற்பாட்டாளர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com