கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், பாடல்களை அனுமதிக்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை

கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், பாடல்களை அனுமதிக்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை
கோவில் திருவிழாவில் ஆபாச நடனம், பாடல்களை அனுமதிக்க முடியாது – மதுரை உயர்நீதிமன்ற கிளை

கோவில் திருவிழாக்களில், கலை நிகழ்ச்சிகள் எனும் பெயரில் ஆபாச நடனங்கள் ஆடுவதையும், பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'குலசேகரன்பட்டினம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவின் போது பக்தர்கள் வேண்டுதல் செய்து, பல வேடமிட்டு தங்கள் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். இந்த விரத முறை நாளடைவில் பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு பார் நடன மங்கையர், துணை சினிமா நடிகைகள், சின்னத் திரை நாடக நடிகர்களை அதிக பணம் கொடுத்து அழைத்து வந்து, சினிமா பாடல்களுக்கு ஆடும் முறையை ஆரம்பித்து வைத்தனர்.

தற்போது இந்த நடைமுறை அதிகரித்து வருகிறது. இது குலசை விழாவின் பாரம்பரிய விரத முறையை சீர்குலைக்கிறது. இந்த நடிகர் நடிகைகள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச உடையணிந்து ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் நன்மதிப்பை குறைக்கிறது. மைசூர் போல் பல வெளிநாட்டு பார்வையாளர்களை ஈர்க்க வேண்டிய தசரா ஆன்மீக திருவிழாவின் மதிப்பு, சிலருடைய செயல்களால் குறைந்து வருகிறது.

எனவே ஆன்மீக நிகழ்ச்சியான குலசை தசரா நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா குத்துப் பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, ”குலசை தசரா விழாவின் போது பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் மற்றும் சினிமா பாடல்கள் பாடவும், ஒலிப்பரப்பி ஆடவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருவிழா தொடங்குவது முதல் முடியும் வரை நேரில் சென்று கண்காணித்து, பக்திப் பாடல்கள் அல்லாத பாடல்கள் ஒலிபரப்பப் படவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரும் இதனை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கோவில் திருவிழாக்களில், கலை நிகழ்ச்சிகள் எனும் பெயரில் ஆபாச நடனங்கள் ஆடவதையும், பாடல்களை இசைப்பதையும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக விரிவான உத்தரவை பிறப்பிப்பதாக கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com