"ஆரோக்கியத்தைக் காக்க விரைவில் ஒரு இயக்கம்" - திவ்யா சத்யராஜ் !

"ஆரோக்கியத்தைக் காக்க விரைவில் ஒரு இயக்கம்" - திவ்யா சத்யராஜ் !

"ஆரோக்கியத்தைக் காக்க விரைவில் ஒரு இயக்கம்" - திவ்யா சத்யராஜ் !
Published on

மனிதர்களின் ஆராக்கியத்தைக் காக்கும் வகையில் விரைவில் ஒரு இயக்கத்தைத் தொடங்கவுள்ளதாக நடிகர் சத்யராஜின் மகளும் பிரபல ஊட்டச் சத்து நிபுணரான திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜுக்கு இரண்டு பிள்ளைகள். மகன் சிபிராஜ் திரைத்துறையில் நடித்து வருகிறார். அவரது மகள் திவ்யா திரைத்துறை மீது விருப்பம் இல்லாமல் ஊட்டச்சத்து மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர், திரைத்துறையில் இல்லை என்றாலும் அடிக்கடி சமூகத்தில் நடக்கும் சில அநீதிகள் குறித்து கருத்துகளைத் தெரிவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். கடந்த 2017 ஆண்டு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள் குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஊட்டச்சத்து துறையில் செய்த சேவைகளை அங்கீகரித்து அமெரிக்காவின் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களைக் கௌரவிக்க அமெரிக்காவில் நடைபெறவிருந்த விழா கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திவ்யா சத்யராஜ் கூறுகையில் " அமெரிக்கச் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெறுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அமெரிக்கச் சர்வதேச பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் செல்வின் குமார் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

மேலும்" நான் புத்திசாலி மாணவி கிடையாது. ஆனால் கடின உழைப்பாளி. 'அறிவாளியாக இருப்பதைவிட உழைப்பாளியாக இருப்பதுதான் சிறந்தது' என்று அப்பா சொல்லியிருக்கிறார். ஆரோக்கியமான வாழ்க்கை வசதி உள்ளவர்களுக்குத்தான் என்பது நியாயமே கிடையாது. தமிழ்நாட்டில் குறைந்த வருமானத்தில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரைவில் ஒரு இயக்கம் ஆரம்பிக்க உள்ளேன். வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கும் உணவு தேவை" எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com