சத்துணவு ஊழியர் சங்க வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிக வாபஸ்
5 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வூதியமாக ரூ. 9000 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும், விருப்ப பணி மாறுதல் கோருபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாற்ற உத்தரவு வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வேலை பார்க்கும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து 5 வது நாளாக இன்றும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் போராத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று மீண்டும் சத்துணவுத்துறை அமைச்சர் சரோஜா பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து பல சிறு வயது குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.