செவிலியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை அண்ணாசாலையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் உடலுறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கான விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துக் கொண்டார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள், போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.