திருச்சி ஸ்ரீரங்கநாதன் கோயிலுக்குள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள்: பாஜக புகார்
திருச்சி ஸ்ரீரங்கநாதன் கோயிலுக்குள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சென்றது தொடர்பான விவகாரத்தில் கோயில் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மற்றும் சில இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளன.
கேரள மாநிலத்திலிருந்து சுற்றுலாவிற்கு வந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சிலர் திருச்சி ஸ்ரீரங்கநாதன் கோயிலுக்கு கடந்த செவ்வாய்கிழமை சென்றிருக்கின்றனர். கோயிலின் ஆயிரங்கால் மண்படத்திற்கு சென்ற அவர்கள் கோயிலின் பிரதான சன்னதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஸ்ரீரங்கநாதன் கோயிலுக்குள் சென்றது தொடர்பான விவகாரத்தில் கோயில் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மற்றும் சில இந்து அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளன.
இதுதொடர்பான புகார் மனுவில், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அவர்களின் மத உடைகளை அணிந்தவாறே கோயிலுக்குள் சென்றது தெளிவாக சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்து பக்தர்களின் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. கோயிலின் புனிதத்தை ஏளனம் செய்யும் விதத்திலும் அவர்களின் வருகை இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சேது, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அரவிந்த், ஹிந்து ஆலய மீட்பு இயக்கம் மற்றும் அனைத்து ஹிந்து இயக்கம் ஆகியற்றின் சார்பில் ஒட்டுமொத்த புகாராக ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.