கோடையையொட்டி களைகட்டும் நுங்கு விற்பனை: வரத்து குறைந்ததால் விலை உயர்வு! மகிழ்ச்சியில் வியாபாரிகள்
தமிழகத்தில் குளிர்காலம் முடிந்து வசந்த காலம் எனப்படும் கோடை காலம் துவங்கி உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கேற்றார் போல், கோடை காலம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பலரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
இதையடுத்து கோடை வெப்பத்தை எதிர்கொள்ள பல்வேறு வழிகளை மக்கள் கையாண்டு வருகின்றனர். அவற்றில் முக்கியமானதாக இருக்கிறது, உணவுவகைகள். குறிப்பாக தங்களது உடலை காக்கும் வகையில் இளநீர், மோர், தர்பூசணி, நீர்ப்பழம், நுங்கு போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனர். இவற்றில், கோடை வெப்பத்திலிருந்து இயற்கையாக உடல் நலத்தை காக்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடிய நுங்கின் விற்பனை, தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
அதில் குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் பழைய பெங்களூர் சாலை, ராயக்கோட்டை மேம்பாலம், தாலுகா அலுவலகம் போன்ற முக்கிய இடங்களில் சாலை ஓரங்களில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது. அங்கிருந்த வியாபாரிகளிடையே நாம் பேசியபோது, “இங்கு மூன்று நுங்கு 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மகசூல் குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக நுங்கு வரத்தும் குறைந்துள்ளது. இதனால் விலை சற்று அதிகரித்துள்ளது” என்றனர்.
மேலும் அவர்கள் பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டப்பள்ளி, மகாராஜா கடை, மத்தூர், போன்ற இடங்களில் சீசன் காலங்களில் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து நுங்கை பறித்து விற்பனை செய்வோம். சராசரியாக ஒரு நுங்குக்கு நான்கு முதல் ஐந்து ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதனால் 7 ரூபாய்க்கு ஒரு நுங்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை அதிகம் என்றாலும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் நுங்கை வாங்கிச் செல்கின்றனர்” என்றனர்.
வரத்து குறைந்திருந்தாலும் நுங்கு அதிக விலைக்கு விற்பனையாவதால் நுங்கு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.