ஒரு நம்பர் லாட்டரி விற்பனை: திமுக பிரமுகர் கைது
திருவல்லிக்கேணியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக ஐஎஸ்ஹவுஸ் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அப்போது எஸ்எம்வி கோவில் பகுதியில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்தனர். இதனையடுத்து ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த திருவல்லிக்கேணி எஸ்எம்வி கோவில் தெருவைச் சேர்ந்த விஜயகுமார், ராயப்பேட்டை மாவடி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து ரூ. 1,75,175 பணத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். லாட்டரி விற்பனையில் கைதான விஜயகுமார் திமுகவை சேர்ந்த வட்ட செயலாளர் என்பதும் கண்ணன் சென்னை மாநகராட்சி மலேரியா டிபார்ட்மெண்ட் ஊழியர் என்பது விசாரணையில் தெரியவந்தது.இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.