“தாங்கள்தான் அடுத்த முதல்வர் என அனாதை நிலையில் இருப்போரெல்லாம் சொல்கின்றனர்” - முதல்வர் ஸ்டாலின்!
“கட்சித் தொடங்கியவுடனேயே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என சிலர் பிதற்றிக்கொண்டிருக்கின்றனர்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து அண்மையில் விலகிய மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
அதன்படி, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
முதல்வர் உரை:
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. எங்களை அவர்கள் விமர்சித்துப் பேசுவதாலேயே திமுக மேலும் வளர்ந்து வருகிறது.
திமுக 1949-ல் தொடங்கப்பட்டு, 1957-ல்தான் தேர்தல் அரசியலில் இறங்கியது. ‘ஒட்டுமொத்த தமிழினத்திற்காக உழைத்திட வேண்டும்’ என்ற உணர்வோடு, அதை உறுதி எடுத்தே அறிஞர் அண்ணா இந்த இயக்கத்தை தொடங்கி வைத்தார். ஆனால் இன்று கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சிக்கு வந்துவிடுவோம் என சிலர் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.
‘நாங்கள்தான் அடுத்த ஆட்சி, நாங்கள்தான் அடுத்த முதல்வர்’ என அனாதை நிலையில் இருப்போரெல்லாம் சொல்கின்றனர். அவர்கள் யார், எந்தக் கட்சி என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. காரணம், அவர்களையெல்லாம் நாங்கள் அடையாளப்படுத்த விரும்பவில்லை. இந்த ஒரு காரணத்தினால்தான், மாற்றுக்கட்சி என்றே அவர்களை அழைக்கிறோம்.
உண்மையிலேயே அவர்கள் ஒரு அரசியல் கட்சியாக இருந்து, மக்களுக்காக பாடுபடுகிற கட்சியாக இருந்து, மக்களுக்காக உழைக்கக்கூடிய கட்சியாக இருந்திருந்தால் அவர்களை பெயர் சொல்லி சொல்லலாம். வேஷமிட்டு கொண்டிருக்கக்கூடிய, நாடகம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய கட்சிகளின் பெயர்களை சொல்லி அடையாளப்படுத்த விரும்பவில்லை” என விமர்சித்தார்.