‘கள் எங்கள் உணவு.. கள் எங்கள் உரிமை’ பனை மரமேறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான்
தமிழ்நாட்டில் பனைமரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. மேலும், “கள் ஒரு போதைப்பொருள் அல்ல; கள்ளை மரங்களில் இருந்து இறக்கி விற்பனை செய்ய பிற மாநிலங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது; எனவே தமிழகத்திலும் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்” என தமிழ்நாடு கள் இயக்கம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது.
’மதுபானங்களை தமிழ்நாடு அரசே டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யும் நிலையில் பனை மரத்தில் உற்பத்தியாகும் கள்ளை மட்டும் இறக்க, விற்க தடைவிதிப்பதா?’ என இந்த அமைப்புகள் நீண்ட காலமாக கூறி வருகின்றன. அவ்வப்போது கள் இறக்கும் போராட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
அதோடு, தமிழக பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில், கள் விற்க அரசு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் கள் விடுதலை மாநாடு நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “ரஷ்யாவில் வோட்கா போல் தமிழனின் தேசிய பானம் கள். அதை கள் என சொல்லாமல், பனஞ்சாறு, மூலிகைசாறு எனவும் சொல்லலாம். ஒருநாள் நானே பனை மரம் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்துவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று உழவர் பாசறை சார்பில் ‘கள் எங்கள் உணவு.. கள் எங்கள் உரிமை’ என்ற முழுக்கத்தோடு தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் கள் இறக்கும் போராட்டம் நடைபெற்றது.
களத்திற்கு கட்சி நிர்வாகிகளுடன் சென்ற சீமான் பனைமரம் ஏறினார். கள் இறக்கும் போராட்டத்தில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதன் வழியே பனை மரத்தில் ஏறிய சீமான் கள் இறக்கினார்.
இதில் கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பனை மரத்தில் இறக்கி வந்த கள்ளை அனைவருக்கும் சீமான் வழங்கினார்.