`கொரோனாவுக்கு சரியான சிகிச்சை இல்லை`: தேனி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகை போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 650-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என நாள்தோறும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த பத்து தினங்களில் மட்டும் கொரோனாவால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், இணை நோய்களால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று கொரோனா வார்டில் இருந்து நோயாளிகளுக்கு உதவியாக இருந்த உறவினர்கள் இன்று வெளியேற்றப்பட்டனர். நோயாளிகளின் உறவினர்கள் தங்களை உள்ளே அனுமதிக்கக்கோரி வாக்குவாதம் செய்தனர். சிகிச்சையில் இருக்கும் போது நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் உறவினர்கள் சென்று அழைத்தாலும் மருத்துவ குழுவினர் மெத்தனம் செய்வதாகவும், தாங்கள் உடன் இருக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் வாக்குவாதம் செய்தனர்.
நோயாளிகளுக்கு முறையாக உணவு வழங்கப்படுவதில்லை எனவும் நோயாளிகளை தரக்குறைவாக நடத்துவதாகவும், உரிய சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் அவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதனையடுத்து மருத்துவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நோயாளின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உணவு முறையாக கிடைக்க வழி செய்வதாகவும் சிகிச்சை தரமாக அளிக்கப்படும் எனவும் உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
இதை வீடியோ பதிவு செய்த கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் சிலர் அதனை சமூக வலைதளங்களில் பரப்பினர். தற்பொழுது அந்த வீடியோ தேனி மாவட்டம் முழுவதும் வைரலாகி வருகிறது.