“தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தலை நடத்த பரிந்துரைக்கவில்லை” - சத்யபிரதா சாகு
தமிழகத்தில் வரும் மே மாத வாக்கில் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரையை பிரதான கட்சிகள் தொடங்கியும் விட்டன. தமிழகத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. அது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு கட்ட தேர்தலுக்கு பரிந்துரைக்கவில்லை என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் அனைத்தும் ஒரே கட்டமாக தான் நடத்தப்பட்டுள்ளன. அதனால் இதுவரை, வரும் சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த எந்த திட்டமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசியல் கட்சிகள் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.