கொல்கத்தாவுக்கு சைக்கிளில் செல்ல முயன்ற வடமாநில நபர்கள்..!
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சைக்கிள் மூலம் கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டவர்களை மேட்டூர் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 5 பேர் பெருந்துறை பகுதியில் தங்கியிருந்து டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், முழு முடக்கம் கொண்டுவரப்பட்டதால் வேலை இல்லாமல் தவித்து வந்த அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து ஒருகேன் தண்ணீர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்களை எடுத்துக்கொண்டு சைக்கிள் மூலம் சொந்த ஊரான கொல்கத்தாவுக்கு செல்ல முடிவு எடுத்து புறப்பட்டனர்.
மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே சென்றபோது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது கொல்கத்தா செல்வதாக அவர்கள் கூறினர். அதனை ஏற்க மறுத்து காவல் துறை, அவர்களை தங்கியிருந்த இடத்திற்கு திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளர்கள் 5 பேருக்கும் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.