வடதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
ஆந்திர கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையானது ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"தெற்கு ஆந்திர கடல் பகுதியில் இருந்து குமரி கடல் பகுதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள் வழியாக நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்." என ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் பள்ளிப்பட்டில் 7 சென்டி மீட்டர், பரங்கிப்பேட்டை, சேத்தியாதோப்பில் தலா 5 செ.மீ., கேளம்பாக்கம், வால்பாறையில் தலா 4 செ.மீ, பூந்தமல்லி, காட்டுக்குப்பத்தில் தலா 3 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.