'அக்.26 முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்
வரும் 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கேரள கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 26ஆம் தேதி முதல் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசி, தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் நிலவுகிறது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.