கொரோனாவால் இறந்த வடசென்னை முதியவர்.. : ஆட்சியர் அலுவலக ஊழியருக்கும் கொரோனா..!
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதவிர, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் அலுவலராக பணியாற்றிவரும் 28 வயதான அந்தப் பெண், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் பணியாற்றிய சக ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.