வாட்ஸ் அப் வதந்தி : வட மாநில தம்பதியை விரட்டிப்பிடித்த மக்கள்
புதுக்கோட்டையில் வடமாநிலத்தைச் சேர்ந்த தம்பதியை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து, குழந்தைக் கடத்தல் கும்பல் என காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் குழந்தைக் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலர் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற வதந்திகளை நம்பி மக்கள் யார் மீதும் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் சந்தேகத்திற்கு இடமளிக்கு வகையில் யாரேனும் நடமாடினால் அவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த அமர்த்சிங் என்பவர் தனது மனைவியுடன் மூலிகை மருந்து வியாபாரம் செய்துள்ளார். மினி வேன் மூலம் வியாபாரம் செய்து வந்த அவரிடம், குழந்தைக் கடத்தல் கும்பல் என சந்தேகித்து அப்பகுதி மக்கள் விபரம் கேட்டுள்ளனர். அப்போது அமர்த்சிங் இந்தியில் பேசியதால், அவர்கள் குழந்தைக் கடத்தல் கும்பல் என கூச்சலிட்டுள்ளனர். மக்கள் திரள்வதைக்கண்ட அமர்சிங் அச்சத்தில் அங்கிருந்து வாகனத்தை வேகமாக ஓட்டிச்சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அதிகரிக்க மினி வேனை விரட்டிப்பிடித்த மக்கள், அமர்சிங் மற்றும் அவரது மனைவியை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் உண்மையிலேயே மருந்து வியாபாரம் செய்பவர்கள் என்பது உறுதியானது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் காவல்துறையினர் அவர்களை விடுவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோன்று புதுக்கோட்டை, ஆவூர் அருகே உள்ள மதயானைப்பட்டியில் இன்று மாலை வட மாநிலத்தவர்கள் நான்கு பேர் நடமாடியுள்ளனர். அவர்களின் தோற்றத்தில் சந்தேகமடைந்த மக்கள், அவர்களிடம் யார் நீங்கள்? என்று விசாரித்துள்ளனர். அப்போது மூன்று பேர் அங்கிருந்து ஓட்டம்பிடித்துள்ளனர். இதனால் குழந்தைக் கடத்தும் கும்பல்தான் இது என உறுதி செய்த மக்கள், ஒருவரை பிடித்து கடுமையாக தாக்கினர். இதையடுத்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் காயமடைந்த வடமாநிலத்தவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுபோன்று வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருவதால், மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
(தகவல்கள் : முத்துப்பழம்பதி, புதிய தலைமுறை செய்தியாளர், புதுக்கோட்டை)