நவம்பர் 6 முதல் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும்.. வானிலை மையம் தகவல்
நவம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவ மழை வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் நவம்பர் 6-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கும், 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கும் மீனவர் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் கடந்த 1-ம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் நவம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவ மழை வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.