வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னைக்கு குடிநீர் ஆதாரமான, திருவள்ளுர் மாவட்ட ஏரிகளின் நீர் இருப்பு நினைத்த அளவுக்கு அதிகரிக்கவில்லை என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, 3231 மில்லியன் கனஅடி கொள்ளவு கொண்ட பூண்டி ஏரியில் தற்போது 656 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. 881 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டசோழவரம் ஏரியின் இருப்பு 464 மில்லியன் கனஅடியாகவும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டசெங்குன்றம்ஏரியின் தற்போதைய நீர் இருப்பு1152 மில்லியன் கனஅடியாகவும் உள்ளது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டசெம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 1211 மில்லியன் கனஅடியாகவே இருக்கிறது. இந்த நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11057 மில்லியன் கனஅடி. ஆனால், நிரம்பியுள்ள அளவு 3483 மில்லியன் கனஅடியாகவே இருக்கிறது.
ஆனால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நீர் இருப்பு அளவு இந்த காலகட்டத்தில் உயர்ந்தே இருக்கிறது.கடந்த ஆண்டு பூண்டி ஏரியில் 231 மில்லியன் கனஅடி தண்ணீரே இருந்தது. தற்போது 656 மில்லியன் கனஅடி அளவுக்கு தண்ணீர் இருக்கிது. சோழவரம் ஏரியில் 78 மில்லியன் கனஅடி அளவு மட்டுமே கடந்த ஆண்டு தண்ணீர் இருந்த நிலையில் தற்போது 464 மில்லியன் கனஅடி அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. செங்குன்றம் ஏரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 446 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருந்தது. தற்போது 1152 மில்லியன் கனஅடி அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. அதேபோல செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த ஆண்டு 491 மில்லியன் கனஅடி அளவுக்கே தண்ணீர் இருந்தது. இந்த ஆண்டு 1211 மில்லியன் கனஅடிவரை தண்ணீர் இருக்கிறது. இந்த நான்கு நீர்நிலைகளிலும் சேர்த்து கடந்த ஆண்டு 1246 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் இருந்தது. வடகிழக்குப்பருவமழை தொடங்கி ஒருவாரத்திற்கு மேல் மட்டுமே ஆனநிலையில் தற்போது 3483 மில்லியன் கனஅடி அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. பருவமழைக்காலம் முடிவதற்குள் இந்த ஏரிகள்முழுவதும் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையை இந்த மழை ஏற்படுத்தியுள்ளது.