
தூத்துக்குடியில் போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளையடித்து வந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தைச் சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய், தனது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை வண்ணார்பேட்டையில் இருக்கும் ஏடிஎம்-ல், குற்றவாளிகள் ஸ்கிம்மர் என்ற கருவியை பொருத்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஏடிஎம்மில் தலைமை ஆசிரியை பணம் எடுக்கும் போது அவரது ஏடிஎம் அட்டை குறித்த தகவல்களை ஸ்கிம்மர் கருவி மூலம் சேகரித்து போலியாக கார்டை தயாரித்து பணத்தை எடுத்தது தெரியவந்தது.
காவல்துறையினரின் விசாரணையில், திருச்சி கே.கே நகரை சேர்ந்த சிவனேஸ்வரன், அதே பகுதியை சேர்ந்த ஜெனோபர் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. குற்றவாளிகள் தேடப்பட்டு வந்த நிலையில், தூத்துக்குடியில் வணிக வளாகம் ஒன்றின் அருகே அவர்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற காவலர்கள் இருவரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஸ்கிம்மர் கருவி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு இடங்களில் போலி ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. வழக்கில் தொடர்புடைய மேலும் பலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.