எனது குணத்தை இதுவரை யாரும் குறை சொன்னதில்லை: மனம் திறந்த ஆளுநர்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழல் குறித்தும், அதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் குறித்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மனம் திறந்துள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பல்கலைக்கழக ஊழலில் தமது பெயரையும் இணைத்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தால் அந்தக் குற்றச்சாட்டை தான் ஏற்றுக் கொண்டது போல் ஆகி விடும் என்பதால்தான், அடுத்த நாளே பத்திரிகையாளர்களை அழைத்து விளக்கம் அளித்ததாகவும் கூறியுள்ளார். தனக்கு மகன்கள் மட்டுமல்ல, கொள்ளு பேரன்கள், கொள்ளு பேத்திகளும் இருக்கிறார்கள் என்றும் 78 வயதான தனது குணத்தை குற்றம்சாட்டி இதுவரை யாரும் விரலை உயர்த்தியது இல்லை என்றும் தெரிவித்தார். தம் மீதான குற்றச்சாட்டுகளை மகாராஷ்டிராவில் உள்ள பத்திரிகை நண்பர்களால் ஒருபோது ஜீரணிக்க முடியாது என்றும், அவர்கள் தன்னை தந்தை ஸ்தானத்தில் வைத்தே பாபுஜி என அழைத்து வருவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறையில் நடக்கும் ஊழல்களை தடுப்பது ஆளுநர் என்ற முறையில் தமது கடமை என்றும், அதைதான், தான் செய்து வருவதாகவும் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். டெல்லி சென்றிருந்தபோது நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து பேசியதாகவும், அதை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.