சமூக விரோதிகளின் அடாவடி செயலால் கருகும் நிலையில் நெற்பயிர்கள்..!
வந்தவாசி அடுத்த கண்டையநல்லூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு ஏரி நீரை பயன்படுத்த விடாமல் சமூக விரோதிகள் தடுப்பதாக புகார் எழுந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கண்டையநல்லூர் கிராமத்தில் ஏரி பாசனத்தை நம்பி சுமார் 250 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் மற்றும் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலத்திற்கு நல்லூர் பழுவேரியில் இருந்து நீர் பாசனம் மூலம் நீர் பங்கீடு செய்யப்பட்டு நிலங்களுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது. தற்போது நல்லூர் பழவேரியில் சமூக விரோதிகள் சிலர் சட்டவிரோதமாக அரசின் எந்த விதமான அனுமதியும் இன்றி மீன்கள் வளர்க்க வேண்டும் எனக் கூறி, ஏரியில் பாதி அளவு தண்ணீர் இருந்தும் தண்ணீர் திறந்து விட மறுப்பு தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் மதகின் மூலம் தண்ணீர் திறக்க சென்றால் அவர்களை சமூக விரோதிகள் அடித்து உதைத்து துரத்தி விடுகின்றனர். இதனால் ஏரியில் தண்ணீர் இருந்தும் நெற்பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே நிலங்களில் பயிரிடபட்டுள்ள நெற்பயிற்கள் கருகும் நிலைக்கு வந்துள்ளது. ஏரியில் தண்ணீர் இருந்தும் நெற்பயிர்கள் கருகுவது மிகவும் வேதனைக்குறிரிது என தெரிவிக்கும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் விரைவில் தலையிட்டு நீரை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.