’’அதிமுகவில் போரும் இல்லை, வாரும் இல்லை’’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு அதிமுகவில் போரும் இல்லை, வாரும் இல்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்தார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற போட்டி முதல்வர் மற்றும் துணை முதல்வர் மத்தியில் நிலவி வருவதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அதிமுக 32 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது என்ற சரித்திரத்தை பெற்றுள்ளதோடு 234 தொகுதியிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் நடைபெறும் ஆலோசனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மூத்த அமைச்சர்கள், துணை முதலமைச்சர் ஆகியோரது வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் செல்வது வழக்கம். அதிமுக தற்போது இரட்டை தலைமையோடு செயல்படுவதாக கூறிய அவர், முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அது நான்கு சுவர்களுக்குள் கழகத்தில் எடுக்கப்படும் முடிவு என்று கூறினார்.
தொடர்ந்து, சசிகலா வருகை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு கடந்த காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தை பற்றி யோசியுங்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை என்று பதிலளித்தார்.