”சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை..” - ஆளுநர் முன்வைத்த குற்றச்சாட்டு!
சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று, பெற்றோர் நினைப்பதாகவும், இதுபற்றி கல்லூரி மாணவிகள் தன்னிடம் கூறியதாகவும், ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, பொடவூரில் உள்ள பிரம்மகுமாரிகள் மையத்தில் அகில இந்திய மாதர் சங்கத்தின் 93 ஆம் ஆண்டு மாநாட்டை, ஆளுநர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
அப்போது விழா மேடையில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,
“பெண்கள் கல்வி கற்று விட்டார்கள் என்றால் இருக்கக்கூடிய அடுத்த பிரச்சனையை பற்றி பேச வேண்டும்,. பெண்கள் அனைத்து துறையிலும் இருக்க வேண்டும் அது குறித்து நாம் பேச வேண்டும். பெண்கள் தற்போது பட்டம் பெற்று விட்டார்கள் கோல்ட் மெடல் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் வேலை செய்யும் இடங்களில் அவர்களுடைய பங்களிப்பு குறைவாகவே உள்ளது.
பட்டமளிப்பு விழா முடிந்த பிறகு கோல்ட் மெடல் வென்ற மாணவிகளிடம் நான் பேசுவேன். அப்போது பெண்கள் பலரும் கண்களில் கண்ணீருடன் நான் சென்னைக்கு சென்று படிக்க மாட்டேன் என கூறுவார்கள். சென்னைக்குச் சென்று படிப்பது பாதுகாப்பில்லை என தங்கள் பெற்றோர்கள் கருதுவதாகவும் அந்த மாணவிகள் வேதனையுடன் தெரிவிப்பார்கள் இதுதான் இருக்கக்கூடிய பிரச்சனை.
சென்னை நகரத்தை பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும் நகரங்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் படித்த பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாகவே உள்ளது” என பேசினார்.
இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து 500 க்கும் மேற்பட்ட மாதர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.