இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை: கிராம மக்கள் தவிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இறந்தவர் உடலை கொண்டு செல்ல பாதையில்லாமல் வயல் வழியாக கொண்டுச்செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சித்தேரி கிராமத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இடுகாடு உள்ளது. ஆனால், சாலை வசதி இல்லாததால் அக்கிராமத்தில் எவரேனும் உயிரிழந்தால் விவசாய நிலங்கள் வழியாக பெரும் சிரமத்திற்கு இடையே உடலை சுமந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. மழைக்காலங்களில் சடலத்தை சுமந்து செல்லும்போது, சடலத்துடன் சேற்றில் விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டும் கிராம மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
இடுகாட்டிற்கு சாலை அமைத்து தர வேண்டி கிராம மக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் பொதுமக்களின் சிரமத்தை குறைக்க, இடுகாட்டிற்கு சாலை அமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.