சாலை வசதி இல்லாததால் வயல்வெளியில் சடலத்தை கொண்டு செல்லும் அவலம்
சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்து செல்லும் அவல நிலை வேலூர் அருகே உள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா அருகே உள்ள ராஜபாளையம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் இறந்தவர்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்ல சாலைவசதி இல்லாததால், வயல்வெளி வழியாக சடலத்தை எடுத்து செல்லும் அவல நிலை உள்ளது.
இக்கிராமத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சுகுமார் ஆகியோர் கடந்த 4-ம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். அவர்களின் இறுதிச்சடங்கு முடிந்து உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாததால் சுமார் ஒருகிலோ மீட்டர் தூரம் விவசாய நிலம் வழியாகவும், வயல்வெளியாகவும் சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர் கிராம மக்கள்.
தற்போதைய காலகட்டத்திலும் இறந்த மனிதனின் உடலை அடக்கம் செய்யக்கூட வசதி இல்லாத கிராம மக்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுடுகாட்டிற்கு சாலை அமைத்து தரக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அரசு இனியாவது இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.