அன்பிற்கும் உண்டோ பாகுபாடு: ஆட்டுக்குட்டிக்கு பால் புகட்டும் நாய்..!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பிறந்து சில மாதங்களே ஆன ஆட்டுக்குட்டிக்கு, வீட்டில் வளரும் நாய் ஒன்று தாய்பால் ஊட்டி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கேசம்பட்டியை சேர்ந்தவர் தெய்வம். விவசாயியான இவர் அதே ஊரில் ஒரு சிறிய டீ கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் வளர்த்து வந்த ஆடு ஒன்று இரண்டு மாதத்திற்கு முன்னர் குறைமாத நிலையில் (வளர்ச்சியடையாத ) ஆட்டுகுட்டியை ஈன்று நோய்வாய்ப்பட்டுள்ளது. இதனால் ஆட்டை மட்டும் விற்றுவிட்டு குட்டிக்கு மாட்டுபால் கொடுத்து வளர்த்து வந்தார் தெய்வம். இந்நிலையில் அவரது வீட்டில் வளரும் நாய் ஒன்றும் குட்டிகளை ஈன்று பால்கொடுத்து வரும் நிலையில், ஆட்டுகுட்டிக்கும் நாளடைவில்அந்த நாய் பால் கொடுக்க ஆரம்பித்தது. தற்போது கடந்த 2 மாதங்களாக ஆட்டுகுட்டிக்கு நாய் தான் பால் கொடுத்து வருகின்றது. இந்த நிகழ்வை கண்டு ஏராளமானோர் வியப்படைகின்றனர்.