ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை விதிகளில் எந்தவித தளர்வும் இல்லை : தமிழக அரசு
ராஜீவ்காந்தி வழக்கில் தொடர்புடைய 7 பேரும், சிறையில் இருக்கும் வரை சிறைச்சாலை விதிகளை முழுமையாக எந்தவித தளர்வும் இல்லாமல் பின்பற்ற வேண்டுமென தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு உடல்நலத்தை காரணம் காட்டி 90 நாட்கள் பரோல் வழங்கக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி இந்த வழக்கை விசாரித்தனர்.
அற்புத்தம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ‘சிறை விதிகளில் தளர்வு கொடுத்து அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரதாப் குமார் ‘ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் இருப்பவர்கள் விடுதலையாகும் வரை சிறைச்சாலை விதிகளை முழுமையாக எந்தவித தளர்வும் இல்லாமல் பின்பற்ற வேண்டும்.
பேரறிவாளன் சிறையில் நலமுடன் இருக்கிறார். கொரோனா காலத்தில் அவர் சிறையில் இருப்பது தான் உகந்தது.
மேலும் அவருக்கு கடந்த ஜனவரியில் தான் பரோல் முடிந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே அவரது பரோல் குறித்து முடிவெடுக்க முடியும்’ என தெரிவித்தார்.
இந்த வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.