சென்னையில் போலீசாருக்கு இன்று தபால் வாக்குப்பதிவு: முறையான ஏற்பாடு இல்லை என புகார்
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காலவர்களுக்கும் இன்று தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனிடையே தபால் வாக்குப்பதிவில் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் அனைத்து காவலர்களும் தங்களது ஜனநாய கடமையாற்றும் வகையில் இன்று அவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளுர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் காலை 7 மணிக்கு சென்றே வாக்களித்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் என நினைத்து அவர்களின் வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளனர். அப்போது பல இடங்களில் முறையான ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை காத்திருந்த காவலர்கள், வாக்களிக் க முடியாமல் விரக்தியுடன் திரும்பிச் சென்றனர். குறிப்பாக பல்லாவரம் வாக்குச்சாவடியில் முறையான ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இதுவரை தபால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை என்று கூறப்படுகிறது. அரசு அலுவலர்கள், போலீசார் தபால் வாக்குப்பதிவு செலுத்த கால அவகாசம் இன்னும் இருக்கிறது. ஆனாலும் 7 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், முறையான ஏற்பாடு இல்லாமல் இருந்ததால் காவலர்கள் விரக்தி மற்றும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.