“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி

“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி

“சோதனையில் ஒன்றையும் கைப்பற்றவில்லை” - கனிமொழி பேட்டி
Published on

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் தான் தங்கியிருந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஒன்றும் கைப்பற்றப்படவில்லை என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் குறிஞ்சி நகரில் உள்ள கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சோதனை முடிந்து அங்கிருந்து வருமான வரித்துறையினர் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இரவு 8.30 மணியளவில் சில வருமானவரித்துறையினர் சோதனை செய்ய வந்துள்ளதாக சொன்னார்கள். நான் அவர்களிடம் சோதனை செய்ய உரிய ஆவணம் இருக்கிறதா ? என்று கேட்டேன். மேலும் இரவு நேரத்தில் சோதனை செய்வதற்கு அனுமதி இருக்கிறதா ? என்று கேட்டேன். அதற்கு அவர்களிடம் சரியான பதில் இல்லை. ஆனால் நாங்கள் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தோம். சோதனைக்குப் பிறகு 9.30 மணியளவில் எனக்கு ஒரு சம்மன் கொடுக்கப்பட்டது. 

அதில், அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னை உடனே பதில் சொல்லச்சொன்னார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. நான் எதிர்க்கட்சி வேட்பாளராக இருப்பதால் என்னை சோதிக்க வந்துள்ளார்கள் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் எதுவுமே நடக்கவில்லை என அவர்களே ஒப்புக்கொண்டு சென்றுள்ளார்கள். தமிழிசை வீட்டில் கோடிக் கோடியாய் பணம் இருக்கிறது அங்கு சென்று சோதனை செய்ய தயாரா? தேனியில் நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறோம் அங்கு சென்று சோதனை செய்ய தயாரா ? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுள்ளார். இதையே தான் நானும் கேட்கிறேன். 

இங்கே எங்களை அச்சுறுத்துவதாக நினைத்துக்கொண்டு சோதனை செய்கின்றனர். எந்தவித அடிப்படையிமின்றி சோதனை செய்துள்ளனர். தோல்வி பயத்தில் இந்த சோதனை செய்துள்ளனர். இதற்கெல்லாம் பயந்த கட்சி திமுக கிடையாது. எதுவாக இருந்தாலும் நாங்கள் சந்திப்போம். ஆனால் இது ஜனநாயகத்திற்கு விரோதமானது. வருமானத்துறையும், தேர்தல் ஆணையமும் மோடியுடன் கூட்டணி சேர்ந்து, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி வருகின்றனர். ஆனால் எங்கள் தொண்டர்கள் இனிமேல் தான் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள்” என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com