புயல் பாதித்த பகுதிகளில் கட்டுக்குள் இருக்கும் தொற்றுநோய் - சுகாதாரத்துறை
புயல் பாதித்த பகுதிகளில் தொற்றுநோய் முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்ட கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்தனர். 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏராளமான தென்னை, வாழை, முந்திரி மரங்கள் வேரோடு முறிந்து கிடக்கின்றன. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை தொலைத்து தவிக்கின்றனர். மின் விநியோக சீரமைப்பு, மரங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி மழையும் பெய்து வருவதால் வீடுகளை இழந்த மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 65 மருத்துவக் குழுக்களை அனுப்பி வைக்கும் நிகழ்வு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய ராதாகிருஷ்ணன், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காமேஸ்வரம், புஷ்பவனம், கோடியக்கரை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே 100 மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார். கூடுதலாக இன்று 65 மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மக்கள் எதிர்பார்க்கும் வரை சுகாதாரப் பணிகள் தொடரும் என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.