தங்கச்சிலையில் துளியளவும் இல்லாத தங்கம்: ஏகாம்பரநாதர் கோயிலில் அடுத்த அதிர்ச்சி
பழமையும் பெருமையும் மிக்க காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிதாக செய்யப்பட்ட இரு சிலைகளில் தங்கம் எதுவும் சேர்க்கப்படவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது. சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினரின் சோதனையில் இந்த தகவல் அம்பலமாகியுள்ளது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் கடந்த 2015 ஆம் ஆண்டு சோமாஸ்கந்தர் சிலை புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. பழைய சிலை சின்னாபின்னமாகிவிட்டதை அடுத்து சுவாமிமலையில் இருந்து ஐந்தே முக்கால் கிலோ தங்கத்தில் சோமாஸ்கந்தர் சிலை உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் அண்ணாமலை என்பவர் தொடர்ந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க நீதிபதி மீனாட்சி உத்திரவிட்டார். இந்த வழக்குகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணை நடத்தினர்.
சிலை தயாரித்த தலைமை ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், கோயில் ஸ்தானிகர் ராஜப்பா உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரகுபதி தலைமையிலான போலீசார், ஆய்வு மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ரகுபதி தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஏகாம்பரநாதர் கோயில்களில் உள்ள சிலைகள் தொடர்பாக சோதனை நடத்தினர். சுமார் 5 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பின் பேசிய ஏ.டி.எஸ்.பி வீரமணி புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார் குழலி சிலைகளில் தங்கம் எதுவும் சேர்க்கப்படவில்லை என்றார். சிலை செய்ய மக்களிடம் எவ்வளவு தங்கம் வசூலிக்கப்பட்டது..? சிலையில் எவ்வளவு தங்கம் சேர்க்கப்பட்டது என்பது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.