”ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்; வன்னியரசு முயற்சிக்கு தவெகவில் உடன்பாடு இல்லை” - எவிடன்ஸ் கதிர்
செய்தியாளர் - பிரசன்னா
மயிலாடுதுறை காதல் ஜோடி உயிரிழப்பு சம்பவம் தமிழ்நாடு அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஆணவப் படுகொலைகள் மற்றும் தனிச்சட்டம் குறித்த புதிய தலைமுறையிடம் எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், அமைச்சர் வன்னியரசு உண்மையிலேயே ஆணவப் படுகொலை தடுப்புக்கான தனிச்சட்டம் வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். மற்ற அமைச்சர்களைவிட மிகவும் வெளிப்படையாக இதைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறார். ஆண்டாண்டு காலமாக ஆணவக் கொலைகளுக்கு எதிராக பல்வேறு மேடைகளில் குரல் கொடுத்தவர் அவர். தனிப்பட்ட முறையிலும் இந்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்றார்.
மேலும், எந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் வந்தாலும் இந்த விவகாரத்தில் குரல் கொடுப்பேன் என்று அமைச்சர் வன்னியரசு ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால், அதற்கான அரசியல் சூழல் அவருக்கு கிடைத்ததா? என்பது தெரியவில்லை. அவருக்கு தேவையான இடமும், ஆதரவும் இருந்ததா? என்பதும் தெரியவில்லை. எனக்கு கிடைத்த தகவலின்படி, ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற அவரது முயற்சிக்கு தமிழக வெற்றிக் கழக அரசுக்குள்ளேயே உடன்பாடு இல்லை என்று கூறப்படுகிறது என்றார்.
அதேநேரத்தில், அமைச்சர் வன்னியரசு பேசுவது அவரது தனிப்பட்ட கருத்து அல்ல. அது ஒட்டுமொத்த தமிழகத்தின் குரல். சாதியின் பெயரில் உயிர்கள் பறிக்கப்படுவதைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம். எனவே, தமிழக அரசு எந்த தயக்கமும் இன்றி ஆணவப் படுகொலை தடுப்புக்கான தனிச்சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும். அதுவே சரியான தீர்வாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
மயிலாடுதுறை காதல் ஜோடி உயிரிழப்பு தொடர்பாக பேசிய கதிர், இந்த வழக்கில் கொலைக்கான ஆதாரங்கள் தற்போது குறைவாக இருந்தாலும், தற்கொலைக்கு தூண்டுதல் என்ற கோணத்தில் வழக்கை வலுப்படுத்த வேண்டியிருந்தது என்றார்.
இருவரும், தாக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த சாதி அழுத்தம், சமூக அழுத்தம் ஆகியவை விசாரணையின் மையமாக இருக்க வேண்டும். ஆனால், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் இந்த வழக்கை வெறும் தற்கொலையாக மட்டுமே அணுகியுள்ளது. இதனால், வெளிப்புற காரணங்கள் மறைக்கப்பட்டு, உயிரிழந்த இருவரே தங்களது மரணத்திற்கு காரணம் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அதுதான் இந்த வழக்கின் மிகப்பெரிய குறைபாடு என்று அவர் கூறினார்.
மேலும், சமாதானக் கூட்டத்தில் எப்.ஐ.ஆர். நகல், உடற்கூறு ஆய்வு அறிக்கை, நிவாரணம், அரசு வேலை, வீட்டுமனை உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், அவை சட்டப்படி வழங்கப்பட வேண்டிய நடைமுறைகளே தவிர, வழக்கின் அடிப்படை திசையை மாற்றும் கோரிக்கைகள் அல்ல என்றார்.
இந்த வழக்கின் முக்கியமான அம்சம் தற்கொலைக்கு தூண்டுதல் என்பதை உறுதியாக வலியுறுத்தியிருக்க வேண்டும். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்திருந்தால், வழக்கின் போக்கே மாறியிருக்கும் என்றும் கதிர் தெரிவித்தார்.
ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதில் அரசின் செயல்பாடு மட்டும் போதாது என்றும், காவல்துறை, கல்வித்துறை, சமூக நலத்துறை, மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஆணவக் கொலை வழக்குகளை விசாரிப்பது குறித்து காவல்துறையினரிடம் இன்னும் போதிய புரிதல் இல்லை. சமூகநீதி, இந்திய அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமைகள் மற்றும் ஆணவக் கொலை வழக்குகளை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறைக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். இதுகுறித்து உச்சநீதிமன்றமும் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மேலும், இளம் வயதினரிடையே உருவாகும் காதல் தொடர்பாக கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட கதிர், பருவ வயதில் ஈர்ப்பும் காதலும் இயல்பானவை. ஆனால் அதைக் கையாளும் மனப்பக்குவம், வாழ்க்கையை புரிந்துகொள்ளும் ஆலோசனை, உளவியல் வழிகாட்டுதல் போன்றவை பள்ளி, கல்லூரி மற்றும் குடும்பங்களில் போதுமான அளவில் இல்லை. இதற்காக திட்டமிட்ட ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு கொண்டு வர வேண்டும் எனவும் எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் தெரிவித்துள்ளார்.

