திருவண்ணாமலை மகா தீபம்: பக்தர்களுக்கு மலையேற அனுமதி இல்லை!
மகாதீபத்தின் போது திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “8 பேர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்து நேற்று அதன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையின் தொடர்ச்சியாக அதிகமான நபர்களை மலையின் மீது ஏற்றக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால் மகாதீபத்தின் போது திருவண்ணாமலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
குறைந்தபட்ச மனித சக்தியை பயன்படுத்தும் வகையில் இந்தாண்டு பரணி தீபத்தின் போது 300 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தீபத்தின் போது எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படும்.
அதற்கான அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. நிபுணர் குழு அறிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.