ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்
ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பணிகளுக்கு தடையில்லை: உச்சநீதிமன்றம்

நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது கடந்த மே மோதம் 22-ஆம் தேதி போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, “ஆலையை 30 நாட்கள் இயக்குகிறோம். மாசு ஏதேனும் ஏற்படுகிறதா என்று நீங்களே குழு அமைத்து கண்காணியுங்கள்” என வேதாந்தா குழுமம் சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதனையடுத்து நிர்வாக வேலைகளுக்காவது ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என வேதாந்தா குழுமம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஊழியர்களின் சம்பள பாக்கி உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து வேதாந்தா குழுமம் இந்த கோரிக்கையை வைத்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக ரீதியான பணிகளை மட்டும் மேற்கொள்ள ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. ஆலையை இயக்க அனுமதி இல்லை எனவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதிக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. தமிழக அரசின் கோரிக்கை குறித்து பசுமை தீர்ப்பாயமே விசாரித்து உத்தரவிடவும் ஆணை பிறப்பித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com