மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை: கடலோர காவல்படை விளக்கம்
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை என இந்திய கடலோர காவல்படை விளக்கம் அளித்துள்ளது.
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் கடந்த 13-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக புகார் எழுந்தது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிச்சை என்பவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சில மீனவர்களும் காயம் அடைந்தனர். இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மீனவர்களிடையே அச்சமும், பாதுகாப்பற்ற உணர்வும் ஏற்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பாதுகாப்புத் துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார்.
இதனிடையே, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது பாய்ந்த தோட்டாவானது கடலோர காவல்படை பயன்படுத்தும் தோட்டா பாயிண்ட் 22 எம்.எம் வகையைச் சேர்ந்ததுதான் என இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் கமாண்டர் ராமராவ் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த தகவலை இந்திய கடலோர காவல்படை மறுத்துள்ளது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்தோ, குண்டுகள் குறித்தோ கடலோர காவல்படை நிலைய தளபதி எதுவும் கூறவில்லை என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை எனவும் இந்திய கடலோர காவல்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக மீனவர்கள் மீது பாய்ந்த தோட்டா வகையை கடலோர காவல்படை பயன்படுத்துவது இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.