“3000 டன் தங்கப் படிமங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை” - ஆய்வு நிறுவனம் மறுப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் 3000 டன் தங்கப் படிமங்கள் இருப்பதாக வெளியான தகவலை இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் மறுத்துள்ளது.
இந்திய நிலவியல் ஆய்வு நிறுவனம் தங்கம் இருப்பதாக எந்தத் தரவுகளையும் தரவில்லை என அதன் இயக்குநர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு பகுதியிலும் ஆய்வு நடத்திய பின்னர் அதன் முடிவுகளை மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம் என அவர் கூறியுள்ளார். சோனபத்ரா மாவட்ட பகுதியில் 1998-99, 1999-2000 ஆகிய ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டதாகவும், அப்போது அங்கு மேற்கொண்டு ஆய்வு நடத்தும் அளவு சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சோன்பத்ரா மாவட்டம் சோன்பத்ரா சுரங்கத்துறை அதிகாரி கே.கே. ராய் என்பவர் சோன் பஹாடி, மற்றும் ஹர்தியில் சுமார் 3350 டன் அளவுக்கு தங்க படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் அங்கு இருக்கும் படிமங்களிலிருந்து தங்கத்தைப் பிரித்தெடுத்தால் மொத்தமே 160 கிலோ தங்கம் மட்டுமே கிடைக்கும் என்றும் இந்திய நிலவியல் ஆய்வு நிறுவன இயக்குநர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.