கோரிக்கை நிறைவேறியது: என்.எல்.சி தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
நெய்வேலி என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
என்.எல்.சி சுரங்கம் 1A ல் பணியாற்றும் 750 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 26 நாட்கள் பணி 19 நாட்களாக குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
என்.எல்.சி மனிதவளத்துறை இயக்குநர் விக்ரமன், சுரங்கத்துறை இயக்குநர் சுபிர்தாஸ் ஆகியோரை அழைத்து தொழிலாளர் பிரச்னையில் சுமூக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் அறிவுறுத்தினார். இதேபோல் ஒப்பந்த தொழிலாளர்களிடமும் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்ட என்.எல்.சி நிர்வாகம், பழைய முறைப்படியே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும் என உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த 23 நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒப்பந்த தொழிலாளர்கள் வாபஸ் பெற்றனர்.