நிவர் புயல்: படகுகளை கையாளும் விதம் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் சின்னம் காரணமாக நாகை, காரைக்கால் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி காரைக்காலுக்கும்-மாமல்லபுரத்துக்கும் இடையே நாளை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையோ அல்லது அதி கனமழையோ பெய்யும் எனவும் 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் தெரிவித்துள்ள ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சுற்றளவில் பெரியது என்பதால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிக மழை பொழியும் என்று கூறப்படுகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பழையாறு முதல் கோடியக்கரை வரை உள்ள 64 மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
மாவட்டம் முழுவதும் 1500-க்கும் மேற்பட்ட விசை படகுகள், 6000 பைபர் படகுகள் கரையேற்றி வைக்கப்பட்டுள்ளன. புயலுக்கு முன்னதாக கடலுக்குள் சென்ற பெரும்பான்மையான மீனவர்கள் கரை திரும்பியிருப்பதாக நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் அமல் சேவியர் தெரிவித்துள்ளார்.
காரைக்காலில் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 700-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. விசைப்படகுகளை ஐந்து, ஐந்து படகுகளாக கட்டி வைக்கவேண்டும், நாட்டுப் படகுகளை கடலில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் கவிழ்த்து வைக்க வேண்டும், நாட்டுப்படகில் உள்ள இன்ஜின் மற்றும் வலைகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வேண்டும், என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.